சர்வதேசப் பொருளாதார மந்தநிலைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று நுகர்வுக் கலாச்சாரம். அதாவது, அதீதமான நுகர்வு. நியுயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க அரசு பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிகளைச் சந்தித்தபோது அந்நாட்டின் அன்றைய அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் நுகர்வை அதிகரிக்க அழைப்பு விடுத்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்கும் ஆப்கன், இராக் போர்களுக்கான செலவுக்கும் பல மில்லியன் டாலர்களை புஷ் நிர்வாகம் வாரி இறைத்தபோது ஏறத்தாழ இதை ஒரு பிரசாரமாகவே அவர் முன்னெடுத்தார்.
ஆனால், தன்னுடைய ஆட்சிக் காலத்தின் முடிவில், நாட்டின் மோசமான பொருளாதார சூழலுக்கும் உலகம் முழுவதும் அது எதிரொலிப்பதற்கும் அதீத நுகர்வுக் கலாசாரமே காரணம் என்பதை புஷ் உணர்ந்தார். "நெருக்கடிச் சூழலில் செலவழிக்கச் சொன்ன நான், சூழல் மாறியதும் சேமிக்கச் சொல்லத் தவறிவிட்டேன்'' என்றார். பழக்கம் ஏற்படுத்தும் பெரிய துன்பம் இதுதான்: அடிமையாதல்.
அமெரிக்காவைப் பொருத்த அளவில், பொருட்களை வாங்குகிறார்களோ இல்லையோ, சராசரியாக ஒவ்வொருவரும் வாரத்தில் 5 மணி நேரத்தை 'ஷாப்பிங்'குக்காகச் செலவிடுகின்றனர்; வருவாய்க்கு அப்பாற்பட்டு, அடிப்படைத் தேவையற்ற பொருட்களை வாங்க ஆண்டுக்கு ஒவ்வொருவரும் 25,000 டாலர்கள் வரை அழிக்கின்றனர். பொருட்களை வாங்குவது என்பதைத் தாண்டி 'ஷாப்பிங்' என்பது அமெரிக்கர்களுக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. அவர்கள் பின்பற்றும் 'கடன் பொருளாதார முறை' இதை ஊக்குவிக்கிறது. அதுவே இன்று அவர்களுடைய பொருளாதாரத்தைச் சடுதியில் தள்ளிவிட்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம்.
அமெரிக்காவில் மட்டுமல்ல; வளர்ச்சியடைந்த - வளர்ந்துகொண்டிருக்
நம்முடைய வாழ்கையில் அடிக்கடி நாம் கேட்கும் சொலவடை "கையில் காசில்லாத நாய்க்கு கடைத்தெருவில் என்ன வேலை'' என்பது. ஆனால், இப்போது இங்கேயும்கூட சூழல்கள் மாறுவதைப் பார்க்கிறோம். தொலைக்காட்சி நேர்காணல்களில், "உங்களுடைய பொழுதுபோக்கு என்ன'' என்ற மரபான கேள்விக்கு, பலரும் "ஷாப்பிங் செல்வது'' என்று சொல்லிவைத்ததைப்போல பதிலளிப்பதை சகஜமாகப் பார்க்கிறோம். இசை கேட்பது; புத்தகங்கள் வாசிப்பது போன்று 'ஷாப்பிங் செல்வது' இங்கும் ஒரு பழக்கமாக உருமாறுவதைப் பார்க்கிறோம்.
பொதுவாக, நுகர்வுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க சந்தையும் பொருளாதாரமுமே பிரதான நோக்கங்களாக இருக்கின்றன. ஆனால், நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவு பொருளாதாரத்தில் மட்டும் தாக்கங்களை ஏற்படுத்துவதில்லை. தனி மனித வாழ்க்கையிலும் சமூகத்திலும் அது பெரிய பாதிப்புகளை உருவாக்குகிறது. வாங்குவது, மேலும் வாங்குவது, அந்தஸ்தைக் காட்ட வாங்குவது, வாங்கும் பொருட்களை வைப்பதற்கு ஏற்ற இடத்தைத் தேடுவது, வாங்கும் திறனுக்கு வருவாய் போதாதபோது கடன் வாங்குவது, கடனுக்காக வட்டி கட்டுவது, கடனை அடைக்க கூடுதல் வேலை பார்ப்பது, உடலும் மனமும் நெருக்கடிக்குள்ளாகும்போது மனித உறவுகள் சிதைவது என்று அதீத நுகர்வுக் கலாச்சாரம் முதலில் தனி மனித வீழ்ச்சிக்கு வித்திடுகிறது; கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலை ஏற்படும்போது அடுத்து, சமூகத்தின் வீழ்ச்சிக்கு வித்திடுகிறது. அதிகம் நுகர்கின்ற மனிதன் முன்னேறுபவன்; அதிகம் நுகர்கின்ற நாடு முன்னேறிய நாடு என்கிற சித்தாந்தம் அனேகமாக தோற்றுவிட்டது. சர்வதேசப் பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் இன்று நாம் அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், இன்றைய பிரதிபாவின் வார்த்தைகள் நேற்றைய புஷ்ஷின் வார்த்தைகளை நினைவூட்டுகின்றன.
2009 தினமணி
அக்கறையின் துயரம்
பதிலளிநீக்கு