முரண்கள் சூழ்ந்த ஒரு தருணம் இது. ஒருபுறம், உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான நம் மொழியின் பழைமையையும் அதன் செவ்வியல்தன்மையையும் கொண்டாடும் வகையில் மாநாடு எடுக்கிறோம்; மறுபுறம், அம்மொழியின் இன்றைய நிலை, அது எதிர்கொள்ளும் நவீன மாற்றங்கள் - சவால்கள், அதன் எதிர்காலம்குறித்த கவலை நம் யாவருடைய மனத்திலும் கவிந்திருக்கிறது. ஆனால், செம்மொழியான எம் மொழியின் எதிர்காலம் இந்த முரண்களுக்கு இடையில்தான் சிக்குண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
ஒரு மொழியைப் பேசுகிற மக்கள் பல்வேறு பகுதிகளாகப் பிரிந்து செல்கிறபோதும் அந்த மக்களின் வழக்கிலிருந்து அம்மொழியின் பயன்பாடு குறைகிறபோதும் முதலில் அந்த மொழி தன் பேச்சு வழக்கையோ, எழுத்து வழக்கையோ இழக்கிறது. பிறகு, ஒரு காலகட்டத்துக்குப் பின் எஞ்சியிருக்கும் வழக்கிலிருந்தும் அருகி, படிப்படியாக அழிந்துபோகிறது. உலகில் இதுவரை அழிந்துபோன, அருகிக்கொண்டிருக்கும் மொழிகள் யாவற்றின் வரலாறும் இதுதான். உலகில் தமிழுடன் ஒப்பிடத் தக்க தொன்மையான மொழிகளான கிரேக்கம், லத்தீன், பாலி யாவும் இந்நிலையையே எதிர்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், வரலாற்றுக் காலம் தொடங்கி - அதாவது, நமக்கு இதுவரை கிடைத்திருக்கும் தொல்லியல் சான்றுகள் மற்றும் இலக்கியத் தடயங்கள் வாயிலாக அறியப்படும் அறிவியல்பூர்வமான தமிழின வரலாற்றில் - முன்னெப்போதும் சந்தித்திராத ஒரு பெரும் மாற்றத்தை சமூக ரீதியாகவும் மொழி ரீதியாகவும் சமகாலத்தில் தமிழ் எதிர்கொள்கிறது. மொழிப் பயன்பாட்டில் பெரும் சரிவை தமிழ் எதிர்கொள்கிறது. சிறுசிறு பகுதியாக தத்தம் பாராம்பரிய வாழிடங்களிலிருந்து அந்நிய ஊர்கள், அந்நிய நகரங்கள், அந்நிய மாநிலங்கள், அந்நிய நாடுகள் எனத் தமிழர்கள் இடம்பெயர்கிறார்கள். பாரம்பரிய வாழிடங்களிலிருந்து பழையவர்கள் வெளியேறும்போதும் புதியவர்கள் உள்நுழையும்போதும் அந்தந்தப் பகுதி சார்ந்த, வட்டாரத் தமிழ், வழக்கை இழக்கிறது. ஆயிரக் கணக்கான சொற்களும் தனித்துவமிக்க பழக்கவழக்கங்களும் கலாசாரமும் அந்த வழக்கோடு மறைகின்றன. ஒரு பொது வழக்கை நோக்கி ஒட்டுமொத்த தமிழினமும் நகர்கிறது.
இத்தகைய ஒரு தருணம்தான் ஒரு மொழிக்கு முக்கியமான காலகட்டமாக - அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வல்லதாக அமைகிறது. ஓர் இனம் - தன் மொழியின்பால் அக்கறையுள்ள ஒரு சமூகம் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும் செயல்பட வேண்டிய தருணமும் இதுவே. ஆனால், தமிழுக்கு அப்படிப்பட்ட அக்கறை கிடைக்கிறதா என்று கேட்டால் எதிர்மறையான பதிலை அளிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையிலேயே நாம் இருக்கிறோம்.
மிக மோசமான ஒரு பொது வழக்கை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். மொழியைத் தனித்தோ, சரியாகவோ பயன்படுத்தத் தெரியாத - தவறாகப் பயன்படுத்துவதையே வழக்கமாகக்கொண்ட - தவறான மொழிப் பயன்பாடுகுறித்த எந்த வெட்கமும் இல்லாத - சொரணையற்ற மனோபாவத்தைக் கொண்ட பொது வழக்கை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.
இந்தப் பொது வழக்குக்கான சூத்திரதாரிகள் - மொழியைத் தொழில் கருவியாகப் பயன்படுத்துபவர்கள் - அரசினர், ஊடகத்தினர், பாடத்திட்ட வடிவமைப்பாளர்கள், ஆசிரியர்கள் - மொழிகுறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் இருக்கிறார்கள். மொழிக்கும் மக்களுக்கும் உள்ள தொலைவை மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் மொழியை அலட்சியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழுக்கும் தமிழர்க்கும் இடையேயான உணர்வுபூர்வமான தொடர்பு நூலிலைகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக அறுந்துகொண்டிருக்கின்றன. தமிழ் எதிர்கொள்ளும் மிகப் பெரிய ஆபத்து இது. ஆனால், இந்த ஆபத்தை ஒரு பொருட்டாகவே கருதாமல் அலட்சியப்படுத்தவும் நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். இவ்வளவு பெரிய ஆபத்துக்கு மத்தியிலேயே நம் மொழிக்கு நாம் முகங்கொடுக்கிறோம்.
ஆனால், இந்த ஆபத்து தமிழ் மட்டுமே எதிர்கொள்ளும் ஆபத்து அல்ல. உலகிலுள்ள பழைமையான மொழிகள் யாவும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இத்தகைய ஆபத்தைச் சந்தித்திருக்கின்றன. மீண்ட மொழிகள் தொடர்கின்றன. சிக்கிய மொழிகள் சிதைகின்றன. வரலாறு நம்மை இன்னமும் கைவிடவில்லை. காலத்தின் முக்கியமான கட்டத்தில் நாம் நிற்கிறோம். நம் தாயும் தந்தையும் நமக்களித்த தமிழ் நம் கைகளில் இருக்கிறது. கைகள் தடுமாறுகின்றன. எதிரே நம் பிள்ளைகள். நாம் என்ன செய்யப்போகிறோம்?
2010 தினமணி
குறிப்பு: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, எழுதப்பட்ட கட்டுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக