ஒரு கோப்பை கேழ்வரகு கூழிலிருந்து புரட்சியைத் தொடங்குவோம்!



    
                  சீன பிரதமர் வென் ஜியாபோ, "மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சீனா கடைப்பிடித்துவரும் ஒரு குழந்தை கட்டுப்பாட்டுச் சட்டம் நல்ல பலனைத் தந்துவருவதால் தொடர்ந்து அமலில் இருக்கும்'' என்று அறிவித்திருக்கிறார். எப்போது தெரியுமா? இந்தியாவின் உணவுத் தேவை, உணவு உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, விலைவாசி உயர்வுக்கான காரணம், பொருளாதாரத் தேக்க நிலை ஆகியவை குறித்து 55 நிமிஷ நீண்ட நெடிய உரையை நம்முடைய நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிக்கொண்டிருந்ததற்கு கொஞ்சம் முன்பு. "இப்பிரச்னையை எதிர்கொள்ள அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கத் தயார்'' என்று மன்மோகன் சிங் சூளுரைத்ததற்கு சற்று முன்பு.

                                      மக்கள்தொகைப் பெருக்கமானது சீனா - இந்தியா இரு நாடுகளுமே எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை என்றாலும், பிரச்னையின் தீவிரம் இரு நாடுகளுக்கும் சமமானது அல்ல. அடிப்படையிலேயே மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு சீனா. இந்தியாவின் நிலப்பரப்பு - வளங்கள் - மக்கள்தொகை அடர்த்தியுடன் சீனாவின் நிலபரப்பு - வளங்கள் - மக்கள்தொகை அடர்த்தியை ஒப்பிட்டால் பிரச்னையின் தீவிரம் சீனர்களுடன் நமக்கு பல மடங்கு அதிகம் என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். இந்த விஷயத்தில் மிக முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.  ஆனால், சீனர்கள்தான் பிரச்னையைப் புரிந்து தீவிரமாகச் செயல்படுகிறார்கள். மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமல்ல; உணவு உற்பத்தியைப் பெருக்குவதிலும். தீவிர சட்ட அமலாக்கம் மற்றும் கடுமையான தண்டனை ஆகியவற்றின் மூலம் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திவரும் (மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் இந்தியாவில் 1.4 %; சீனாவில் 0.6%) சீன அரசு, நவீன வேளாண் சாகுபடிக்கு மாறியதன் மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்கிவருகிறது (ஒரு ஹெக்டேர் தானிய விளைச்சல் இந்தியாவில் 2,203 கிலோ; சீனாவில் 10,500 கிலோ).

                                      இந்த இரு விஷயங்களிலுமே சீன பாணியை இந்தியாவில் கடைப்பிடிக்க முடியாது (அது தேவையும் இல்லை). ஆனால், நமக்கு என்று ஒரு பாணியில் இந்த இரு விஷயங்களையும் கட்டாயம் நாம் கவனித்தாக வேண்டும். எப்படி? மூன்று வழிகள் இருக்கின்றன.
   
1. இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு உறுதியான சட்ட திட்டங்களை அமலாக்க வேண்டும். குறைந்தபட்சம் இரு குழந்தைகள் கட்டுப்பாட்டையாவது அரசு கட்டாயமாக்க வேண்டும். உதாரணமாக, இந்தக் கட்டுப்பாட்டை மீறுவோருக்கு அரசின் எந்த நலத் திட்ட பலன்களும் கிடைக்காதவாறும் ஒரு குழந்தை பெற்றோருக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்குமாறும் சட்டமியற்றலாம். இந்த நடவடிக்கை நியாயமானது மட்டுமல்ல; அவசியமானதும்கூட. கடந்த 20 ஆண்டுகளாகவே இந்தியாவின் சராசரி ஆண்டு பருப்பு உற்பத்தி 1.4 கோடி டன். ஆனால், இதே காலகட்டத்தில் மக்கள்தொகை ஏறத்தாழ 30 கோடி அதிகரித்து இருக்கிறது. பருப்பு விலை குறைவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு குடிமகன், பருப்பு விலை உயர்வுக்கான காரணத்தைப் புரிந்துகொள்வதும் அடுத்துவரும் தலைமுறைக்கு பருப்பு ஆடம்பரப் பொருளாக மாறிவிடாமல் செயல்படுவதும் அவசியம்தானே?

2. வேளாண்மையில் உண்மையான புரட்சியை உருவாக்க வேண்டும். இதற்கான அர்த்தம், புது தில்லியில் இன்று நம் ஆளும்வர்க்கம் யோசிக்கும் ஒப்பந்த முறை விவசாயமோ; கலப்பின விதை விவசாயமோ அல்ல. மாறாக, நவீனக் கண்டுபிடிப்புகளின் நல்ல அம்சங்களுடன் நம்முடைய பாரம்பரிய விவசாய முறைக்குத் திரும்புதல். நாட்டிலுள்ள பயிரிடத்தக்க நிலங்களை மீள் ஆய்வுசெய்து, சாகுபடி பரப்பை அதிகரித்தல்; அந்தந்தப் பகுதிக்கும் சூழலுக்கும் ஏற்ற பயிர்ச் சாகுபடி; கிராமங்கள்தோறும் தற்சார்பான பாசன நீர்க் கட்டுமானங்கள் - சிக்கன நீர்ப் பாசனம்; கூட்டுப் பண்ணை முறை; அனைத்துப் பயிர்களையும் கொள்முதல் செய்யும் அரசுசார் கொள்முதல் அமைப்புகள் மற்றும் மதிப்புக்கூட்டுப்பொருள் தொழிற்சாலைகள் - விற்பனையகங்கள். இப்படி யோசித்துப் பாருங்கள். புல், பூண்டுச் செடிகள் மட்டுமே மண்டிக் கிடக்கும் ஓரிடத்தில் - அது எந்தப் பயிர்ச் சாகுபடிக்கும் லாயக்கில்லாத நிலமாக இருந்தாலும் - புல் சாகுடியை முறையாக மேற்கொள்ளுதல்; கூடவே ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணையைத் தொடங்குதல் - முடிந்தால் பால் பொருள் தொழிற்சாலை - அதை விற்க அருகிலுள்ள நகரில் சிறு விற்பனையகம். நிச்சயம் நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முடியும்; விவசாயத்தை லாபகரமான ஒரு தொழிலாக மாற்ற முடியும்.

3. மக்களின் உணவுப் பழக்கத்தை நிர்வகித்தல். மேலோட்டமாகப் பார்த்தால் இது நகைப்புக்குரியதாகத் தோன்றலாம். ஆனால், புதிய வேளாண் புரட்சியின் வெற்றிக்கு இந்த உணவு மேலாண்மை மிக முக்கியமானதாகும். இதுவும் புதிய விஷயமில்லை. நம்முடைய பாட்டன் காலத்து சாப்பாட்டுமுறைக்குத் திரும்புதல்; அவ்வளவே.  அதாவது அந்தந்தப் பகுதிக்கேற்ற பயிர்ச் சாகுபடிக்கான தேவையை உருவாக்கும் வகையில் நம்முடைய உணவு முறையில் அனைத்துப் பயிர்களுக்கும் இடம் அளித்தல். உதாரணமாக, தமிழகத்திலுள்ள மானாவாரி பகுதிகளில் உள்ள பயிரிடத்தக்க நிலங்கள் ஏராளமானவை பெரும்பாலான காலங்களில் தரிசாகவே கிடக்கின்றன. வசதியுள்ளோர் ஆழ்குழாய்க் கிணற்று நீர்ப் பாசனம் மூலம் நெல் சாகுபடி மேற்கொள்வதும் ஏனையோர் வாய்ப்புள்ள சந்தர்ப்பங்களில் மட்டும் அப்போதைய சந்தைத் தேவைக்கேற்ற பயிர்ச் சாகுபடி மேற்கொள்வதுமே இதற்கு காரணம்.  பொதுவாக, தமிழகத்தில் மக்காச்சோளம் தவிர்த்து (அதுவும்கூட கோழித் தீவனமாகப் பயன்படுவதால்), ஏனைய மானாவாரிப் பயிர்களுக்கு உறுதியான ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. ஆனால், மக்களின் உணவு முறையில் ஒரு சின்ன மாற்றத்தை உருவாக்குவதன் மூலம் தமிழகத்தின் உணவுத் தேவை ; மானாவாரி பயிர்ச் சாகுபடியில் மகத்தான மாற்றத்தை உருவாக்க முடியும். எப்படி?

                                      காலையில் இட்லி - தோசை - சப்பாத்திக்குப் பதிலாக ஒரு கோப்பை கேழ்வரகு கூழ் அல்லது கம்பங்கூழ் அல்லது தினைப் பாயசம் அல்லது வரகரசி சாதம். உடலுக்கு நல்ல வலுவைத் தரக்கூடிய இந்த உணவுக்கு மாறுவதன் மூலம் ஒருபுறம் தமிழகத்தின் அரிசி - கோதுமை தேவையில் மூன்றில் ஒரு பங்கை அப்படியே குறைக்க முடியும்; மறுபுறம் மானாவாரிப் பயிர்களுக்கு என்று ஒரு பெரும் தேவையையும் சந்தையையும் உருவாக்க முடியும். இப்படி, ஒவ்வொரு மானாவாரிப் பயிரையும் வாரத்தில் ஒரு நாள் உணவுப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும்.  மக்களிடத்தில் நம்முடைய உணவுத் தேவை மற்றும் உற்பத்தியில் உள்ள சிக்கல்களையும் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவையையும் அரசு விளக்கலாம். மானாவாரிப் பயிர்களைக் கொண்டு புதுப்புது உணவு வகைகளைத் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்கலாம். மாற்றத்தை உருவாக்கலாம்.

                                      உலகிலுள்ள எல்லா பிரச்னைகளுக்குமே தீர்வு ஒரே அடிப்படையிலிருந்துதான் கிடைக்கிறது: மாற்றம். விலைவாசி உயர்வுப் பிரச்னைக்கு அரசியல்வாதிகளின் வெற்றுச் சவடால்களால் நிரந்தரத் தீர்வைக் காண முடியாது; அவர்களை நம்பி இனிப் பயனில்லை. மாற்றத்தை ஒரு கோப்பை கேழ்வரகுக் கூழிலிருந்து நாம் தொடங்குவோம்!
2010 தினமணி

                                  

2 கருத்துகள்:

  1. மாற்றத்தை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும் என்று தலைப்பு சொன்னாலும், குறிப்பிட்ட மூன்று வழிகளும் அரசால் மட்டுமே முறையாக செய்ய முடியும் விஷயங்கள் ஆயிற்றே..?( பின்னிணைப்பான தனிப்பட்ட உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வது தவிர..)

    மக்கள் தொகை பெருக்கம் கவலையளித்தாலும், பெரும்பான்மையான இந்திய மக்கள் உழைக்கும் வயது வரம்பில் இருப்பதால் மக்கள் சக்தியை ஆக்க பூர்வமாக பயன்படுத்தும் திட்டங்கள் இல்லாததே உண்மையான பிரச்சினை என்கிற கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

    பதிலளிநீக்கு
  2. இஸ்ரேல் நீர் வளம் குறைந்த நாடு என்று சொல்கிறார்கள்.பாசன முறையை அதற்கேற்ப வடிவமைத்து இருக்கிறார்கள் .மக்கள் பெருக்கம் 1.4 வளர்ச்சி விகிதம் என்பதை அரசு சமாளிக்க முடியும் .வறுமையின் காரணமாக நுகர்வு குறைந்து இருக்கிறது .எனவே சந்தை இல்லாமல் இலலை .இது ஒரு நல்ல கட்டுரை -பீட்டர்

    பதிலளிநீக்கு