தீர்க்க முடியாததல்ல மின் பிரச்னை

        தமிழகத்தையே வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது மின்வெட்டுப் பிரச்னை. இது தாற்காலிகமானதல்ல என்னும் உண்மை மேலும் நிலைமையை மோசமானதாக்குகிறது. அரசு எந்தளவுக்கு பிரச்னையை உள்வாங்கிக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஒரு ரூபாய் அரிசியையும் ஐம்பது ரூபாய் மளிகைப் பொருள்களையும் காட்டி இப்பிரச்னையை எதிர்கொண்டுவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தால் அதைவிடவும் இந்த அரசை அழிவுக்கு இட்டுச் செல்லும் பாதை வேறொன்று இருக்க முடியாது. இப்போதும்கூட பிரச்னை கை மீறிப் போய்விடவில்லை. பிரச்னையை நேர்மையாகக் கையாளும் மனமிருந்தால் அடுத்த கோடைக்குள் நிலைமையை ஓரளவு சீரமைக்கலாம். சில தீர்வுகள்.
       1. முதலாவதாக அரசு தன் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். அடுத்து, உண்மையான நிலைமையை மக்களுக்கு விளக்க வேண்டும். பிரச்னையின் தீவிரத்தையும் மின் சிக்கனத்தின் அவசியத்தையும் மக்கள் புரிந்துகொள்ளவும் ஒத்துழைப்பு அளிக்கவும் இது உதவும்.
       2. தமிழக மின் விநியோகத்தில் தொழில் துறை 39.6 சதமும் விவசாயத் துறை 27 சதமும் குடியிருப்புகள் 24 சதமும் நுகர்கின்றன என்று கூறப்பட்டாலும் ஒட்டுமொத்த மின்சாரத்தில் 45 சதம் வரை தண்ணீருக்காகவே நாம் பயன்படுத்துகிறோம். நீர் மேலாண்மையில் உரிய கவனம் செலுத்தினால் நம்முடைய மின் தேவையை வெகுவாகக் குறைக்க முடியும். தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு 961.9 மி.மீ. இதில் 67 சதத்துக்கும் மேலான நீர் வீணாகிறது. மழைநீர் சேகரிப்பு மற்றும் மேலாண்மையைக் கட்டாயமாக்கினால் பெரியளவில் நம்மால் நீரையும் மின்சாரத்தையும் சேமிக்க முடியும். மேலும், நம்முடைய நீர்த்தேவையில் 40 சதவீதத்துக்கும் மேலாக பூர்த்திசெய்யும் நிலத்தடி நீராதாரத்தையும் இதன் மூலம் பாதுகாக்க முடியும்.
      3. சிறிய அணைத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். 20 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யும் ஏராளமான சிறு, குறு அணைத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் நம்முடைய நீர் மின் உற்பத்தியை மூன்று மடங்காக்க முடியும்.
      4.  ஆண்டின் பெரும்பாலான நாட்கள் முழு சூரிய வெளிச்சத்தைப் பெறும் நாம், சூரிய மின் சக்தியை அற்புதமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தமிழகத்தின் நிலப்பரப்பில் 0.25 சதத்தை சூரிய மின்சக்தி உற்பத்திக்காக நாம் ஒதுக்கினால்கூட நம்முடைய மின் தேவையில் சரி பாதியை அது பூர்த்தி செய்யும். மற்றொரு வகையில், சுதந்திரமான - சுயசார்பிலான தனிநபர் மின் உற்பத்திக்கும்கூட சூரிய மின்சக்தி வழிவகுக்கும். ஒழுங்காக திட்டமிட்டால், வீடுகள்தோறும் சூரிய மின் உற்பத்திச் சாதனங்களை நிறுவி அந்தந்த வீடுகளின் மின் தேவையை அவரவரே பூர்த்தி செய்துகொள்ள வழிவகுக்க முடியும்.
     5. காற்றாலை மின் சாதனச் சந்தையில் சர்வதேச அளவில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனினும், காற்றாலை மின்சார உற்பத்தியில் நம்முடைய பங்களிப்பு மிகக் குறைவு.வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் காற்றாலைகளை நிறுவுவதன் மூலம் மரபுசாரா எரிசக்தித் துறையில் புதிய பயணத்தைத் தொடங்க முடியும்.
    6.  மின் விநியோகத்தில் 17% வரை வீணாவதாக அரசே ஒப்புக்கொள்கிறது. மின் திருட்டுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் கூட்டங்களிலிருந்தே தொடங்கலாம்.
    7. குடியிருப்புகளின் முக்கிய தேவை விளக்குகள், மின்விசிறிகள். குடியிருப்புகளுக்கான அதிக மின் பயன்பாட்டை கோருபவையும் இவைதான்.
குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரும் 'காம்பாக்ட் ஃப்ளோரசன்ட்' மற்றும் 'லைட் எமிட்டிங் டயோடு' விளக்குகளை அரசே சலுகை விலையில் அளிக்கலாம். தமிழகத்தில் இந்த விளக்குகளின் பயன்பாடு ஒரு சதவீதத்தைக்கூட  எட்டவில்லை. இவ்விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் விளக்குகளுக்கான மின் பயன்பாட்டில் 60 சதம் வரை மிச்சப்படுத்த முடியும் (அதேசமயம், பாதரச மேலாண்மை மிக முக்கியம்).
   8. பிரச்னையின் தீவிரம் குறையும் வரை மின் விநியோகத்தில் ரேஷன் முறையை அமல்படுத்தலாம். ஐந்து பேர் கொண்ட சாதாரண ஒரு குடும்பம் வாழ்வதற்கான வீட்டின் மின் தேவையைக் கணக்கிட்டு மின் பயன்பாட்டுக்கு வரையறையைபூநிர்ணயிக்கலாம்.
   9. குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் குளிர்ச்சாதனம், குளிர்ப்பதனப்பெட்டி,  வெப்பக்கலன், மின்கணப்பு உள்ளிட்ட அதீத மின் பயன்பாட்டுச்    சாதனங்களின்  விற்பனையையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தலாம். அதாவது, கூடுதல் வரி. கூடுதல் பயன்பாட்டுக் கட்டணம். 
     இவையெல்லாம் தொலைநோக்கிலான நீண்ட கால பயனளிக்கக்கூடிய தீர்வுகள். பிரச்னையை எப்படியேனும் தீர்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய, பிரச்னையை ஆக்கபூர்வமாக அணுகக்கூடிய அரசு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள். இதிலெல்லாம் நம்பிக்கையில்லை எனில், எளிதாக இன்னொரு 'தீர்வு' இருக்கிறது. இந்த அரசுக்கு ரொம்பவும் அது பிடித்தமானதாக இருக்கக்கூடும். ஆம். மின்சாரமும் இலவசம் என்று அறிவித்துவிடலாம்!
2008 தினமணி

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக