புதுதில்லிக்கு அதிக அச்சுறுத்தல் தந்த ஆண்டு என்று 1997ஆம் ஆண்டைக் குறிப்பிடுவதுண்டு. ஏனெனில், அந்த ஓராண்டில் மட்டும் 9 குண்டுவெடிப்புச் சம்பவங்களை தில்லிவாசிகள் சந்தித்தனர். சில நாள்களுக்கு முன் குண்டுவெடிப்பை எதிர்கொண்ட கரோல்பாக்கும்கூட அப்போது குண்டுவெடிப்பை எதிர்கொண்டது. எனினும், பதினோரு ஆண்டுகளுக்கு முன் கரோல்பாக் எதிர்கொண்ட குண்டுவெடிப்பையும் இப்போதைய குண்டுவெடிப்பையுயும் நாம் ஒன்றாகப் பார்க்க முடியாது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எல்லாமே மாறிவிட்டன. பயங்கரவாதிகளின் சதித்திட்டங்கள், அவர்களுடைய நுணுக்கங்கள், அவர்களிடமுள்ள நவீன சாதனங்கள், கையாளும் தொழில்நுட்பம் என எல்லாமும் மாறிவிட்டன. மாறாதவையும் உண்டென்றால் அது பயங்கரவாதிகளின் நோக்கமும் நம் உளவுத் துறையின் கட்டமைப்பும்தான்.
நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட சம்பவத்துக்குப் பின், உலக உளவுத் துறை வரலாற்றில் முக்கியமான சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த மாற்றங்களிலேயே பிரதானமானது: தகவல்கள் ஒருங்கிணைப்பு. ஏனெனில், அமெரிக்கா இப்படி ஓர் ஆபத்தை எதிர்கொள்ளப்போகிறது என்பதை அந்நாட்டு உளவுத் துறை சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிந்திருந்தது. ஆனால், கிடைத்த தகவல்களை ஒருங்கிணைப்பதில் இருந்த குறைபாடு உளவுத் துறையின் தோல்விக்கு வழி வகுத்தது. இதற்குப் பின்னர் உடனடியாக உளவுத் துறை தகவல் பகிர்தலில் அமெரிக்கா புதிய உத்திகளைக் கையாளத் தொடங்கியது . ஒருபுறம் உள்நாட்டில் உளவுத் துறை தகவல்தொடர்பை எளிமையானதாகவும் கச்சிதமானதாகவும் மாற்றியது. மறுபுறம், அதுவரை தன்னுடைய மிக நெருக்கமான கூட்டாளிகளுடன் மட்டுமே உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் நடைமுறையை மாற்றி, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்திக்கொண்டது. உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்த சரியான நேரத்தில் அமெரிக்கா மேற்கொண்ட மிக சாதுர்யமான நடவடிக்கை இது.
இந்தியாவும்கூட இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை காலம் எத்தனையோ முறை நமக்குத் தந்துவிட்டது. நாம்தான் தயாராகவில்லை.
இந்திய உளவு அமைப்பு மிக விரிவானது. மத்திய உளவுத் துறை, ஆய்வு மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு, தரைப்படை, கப்பல் படை, விமானப் படை, துணை ராணுவப் படை ஆகியவற்றின் உளவுப் பிரிவுகள், பொருளாதார உளவு ஆணையம், மாநில உளவுத் துறைகள் எனப் பலப்பல கிளைகளாகப் பிரியும் நம்முடைய ஒட்டுமொத்த உளவு அமைப்புகளின் செயல்பாடுகளையும் தேசியப் பாதுகாப்பு ஒன்றியம் நிர்வகிக்கிறது. அதன் கீழ் இயங்கும் கூட்டு உளவு ஆணையம் இந்த அமைப்புகள் அளிக்கும் தகவல்களை ஒருங்கிணைக்கிறது. அமைப்பியலின் அடிப்படையில் பார்த்தால் இது அட்டகாசமானதாக தெரியலாம். ஆனால், மிகப் பழமையான - சிக்கலான நடைமுறைகளால் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாமல் சிக்கித் தவிக்கின்றன நம்முடைய உளவு அமைப்புகள்.
* எல்லாத் துறைகளும் பொதுமக்கள் பங்கேற்பைக் கோரும் காலகட்டம் இது. ஆனால், உளவுத் துறையின் அரதப்பழசான ரகசிய அணுகுமுறையால் பொதுமக்களிடம் அந்தத் துறைபற்றிய விழிப்புணர்வே இல்லாத சூழலே இந்தியாவில் நிலவுகிறது. சாதாரணமானவர்களிடம்கூட அதிமுக்கியமான தகவல்கள் இருக்கக் கூடும். பொதுமக்கள் உளவுத் துறைக்குத் தகவல் அளிப்பதற்கேற்ப எளிமையான நடைமுறையைக்கொண்ட தேசிய அளவிலான ஊடகத்தை அரசு உருவாக்க வேண்டும்.
* ஒவ்வோர் பிரிவிலிருந்தும் வரும் தகவல்களை, அந்தந்தத் துறைககளின் தலைமைப் பொறுப்பில் இருப்போரே கூட்டு உளவு ஆணையத்துக்கு அளிப்பவர்களாக செயல்படுவதாலும் மேல்நிலையிலிருந்து கீழ்நிலை வரை சரியான வழிமுறை இல்லாததாலும் பல தகவல்கள் அவரவர் எண்ணத்துக்கேற்ப தவறவிடப்படுகின்றன. எல்லா உளவு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, அரசியல் தலையீடற்ற ஒரு வழிமுறையை உளவு அமைப்புகளுக்கென உருவாக்க வேண்டும். எல்லா தகவல்களையும் ஒருங்கிணைத்து ஆராய்வதற்கென்றே தேசிய அளவில் தனிப் பிரிவைத் தொடங்க வேண்டும்.
* உளவு அமைப்புகளிலேயே அடிமட்டம் வரை இயங்கக் கூடிய முக்கிய அமைப்புகள்-மாநில உளவுத் துறைகள். ஆனால், நம்முடைய மாநில உளவுத் துறைகள் அந்தந்த மாநிலங்களை ஆளும் கட்சிகளின் கைப்பாவைகளாகவே செயல்படுகின்றன. தமக்கேற்ற அதிகாரியை மாநில உளவுத் துறையின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தும் மாநில அரசுகள், தம்முடைய அரசியல் ஆட்டத்துக்கு களத்தகவல்கள் அளிக்கும் துறையாக உளவுத் துறையை மாற்றிவிடுகின்றன. எதிர்க்கட்சிக்காரர்கள் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதில் தொடங்கி அவர்களுடைய பலகீனங்களை ஆளுங்கட்சிக்கு ஆதரவான செய்திகளாக உருமாற்றி புலனாய்வுப் பத்திரிகைகளுக்குத் தீனிபோடும் வேலை வரை உளவுத் துறையினரை மேற்கொள்ள வைக்கின்றன மாநில அரசுகள். மேலும், காவல் துறையினரைப் பொருத்தளவில் உளவுப் பிரிவு தண்டனைக்காலப் பிரிவாகவே பார்க்கப்படுகிறது. மேலிடத்துக்குப் பிடிக்காதவர்களே இங்கு பணியமர்த்தப்படுகின்றனர். இப்படி பணியமர்த்தப்படுவோருக்கு எவ்விதப் பயிற்சிகளும் கிடையாது; நவீன சாதனங்களும் கிடையாது. மாநில உளவுத் துறைகளை அரசியல் கட்சிகளின் உள்அரசியலிலிருந்து விடுவிக்க வேண்டும். முறையான பயிற்சியும் மாறிவரும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கேற்ப நவீன சாதனங்களும் வழங்கப்பட வேண்டும்.
* மாநில உளவுத் துறைகளுக்கிடையேயான உறவு, அந்தந்த மாநிலங்களை ஆளும் கட்சிகளின் அணிகளுக்கேற்பதான் தற்போது இருக்கிறது. இந்நிலை மாறி மாநில உளவுத் துறைகளுக்கிடையேயான சுதந்திரமான பரிமாற்றமும் ஒத்துழைப்பும் தேவை.
* மேலும், பெருகிவரும் அச்சுறுத்தல்களுக்கேற்ப உளவுத் துறையில் கூடுதலானவர்களை நியமிப்பதுடன் ஏற்கெனவே உள்ள காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
இவையெல்லாம் உடனடியாக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள். அதாவது, அடுத்த குண்டுகள் வெடிக்கும் முன்!
2008 தினமணி
this was published 5 years back , but there is no willing in adoption and implementation of ideas.this is the status of the big nation.this is an example why india is failing in many fronts.
பதிலளிநீக்கு