யார் அந்த நீதிமான்?



    
                         புது தில்லியில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த மறு வாரம். மும்பை, ஜெய்பூர், பெங்களூர், ஆமதாபாத் என நாட்டின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளும் முஸ்லிம்கள் கைதும் ஒரு சேர நடந்த நேரம். முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்திய விவாதங்கள் நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்தன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, எவ்வித மதப் பேதமுமற்ற சாதாரண இந்துக்களிடமும்கூட கசப்பான வார்த்தைகளையும் முணுமுணுப்புகளையும் கேட்க முடிந்தது. பயங்கரவாதத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது என்பதில் எல்லோரும் தெளிவாக இருந்தனர். "தேச விரோத நடவடிக்கைகளுக்கான பொறுப்பு தங்கள் மீதே சுமத்தப்படுவது ஏன் என முஸ்லிம்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்'' என்றெல்லாம் குரல் எழுப்பினார்கள். மத அடிப்படைவாதிகளின் தாக்குதல்கள் ஒரு சமூகத்தின் மீதான பார்வையையே மாற்றிக்கொண்டிருப்பதையும் சந்தேகம், விரோதம், புறக்கணிப்பு, அவமதிப்பால் முஸ்லிம் சமூகம்  தனிமைப்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதையும் ஊடகங்கள் சுட்டிக்காட்டின. ஏறத்தாழ செப். 29-ல் மலேகானில் குண்டுகள் வெடிக்கும் வரை இந்த விவாதங்கள் தொடர்ந்தன. மலேகான் சம்பவத்துக்கும்கூட 'முஸ்லிம் தீவிரவாதி'களே காரணம் என்று உள்ளூர் போலீஸ்காரர்கள் முதலில் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால், வழக்கு மஹாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் படை விசாரணைக்கு வந்ததும் எல்லாமும் மாறியது. விவாதங்கள் நின்றுவிட்டன. சிறப்புச் செய்திகள், கட்டுரைகள் நின்றுவிட்டன. மறு பரிசீலனை அறிவுரைகள் நின்றுவிட்டன. ஓர் அசாத்தியமான அமைதி மட்டுமே நிலவுகிறது. ஏன்?

   
                         ஏனெனில், மலேகான் குண்டுவெடிப்பு இந்திய போலி அறிவுஜீவி வர்க்கத்துக்கு,  போலி மதச்சார்பின்மை வர்க்கத்துக்கு, போலி பயங்கரவாத எதிர்ப்பு வர்க்கத்துக்கு ஓர்  உண்மையை - 'பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது; மாறாக அதுவே ஒரு மதம்' என்ற கசப்பான உண்மையை மீண்டும் உணர்த்தியிருக்கிறது. கொஞ்சம் கையும் களுவுமாகவே இந்த முறை உண்மை உணர்த்தப்பட்டிருப்பதால், அதை எதிர்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியாததால் இந்த அசாத்தியமான அமைதி நிலவுகிறது. மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் சாதாரணர்கள் அல்லர். சமூகத்தில் சாதாரணர்கள் எட்ட முடியாத உயரத்தில் இருப்பவர்கள். சாமியார்களும் ராணுவ வீரர்களும் புனிதர்களாகக் கருதப்படும் நம்முடைய சமூக, அரசியல் பின்னணியில் பிரக்யாக்களையும் புரோஹித்களையும் கைதுசெய்வது அத்தனை எளிதான காரியமல்ல. விரைவில் தேர்தல் வரவிருக்கும் சூழலில், மத அடிப்படைவாதிகள் மீண்டும் செல்வாக்கு பெற்றுவரும் சூழலில், தம்முடைய கணிப்பு தவறாகிப் போனால் எத்தகைய பின்விளைவுகளை தாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது மஹாராஷ்டிர அரசுக்கோ காவல் துறைக்கோ தெரியாததல்ல. குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் 'பெண் துறவி' சாத்வி பிரக்யா சிங், ஓர் அடிப்படைவாதி. குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் அவருடையது. குண்டுவெடிப்புக்குப் பின் அவர், அதன் உரிமையாளர் பெயரை மாற்ற முயன்றிருக்கிறார். வாகனத்தின் பதிவு எண்ணையும் 'சேசிஸ்' எண்ணையும் அழிக்க முயன்றிருக்கிறார். குண்டுவெடிப்புக்குப் பிந்தைய அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தச் சம்பவத்தில் சிக்கிவிடக்கூடாது என்னும் நோக்கத்திலேயே அமைந்திருக்கிறது. இன்னும் ஷிவ் நாராயண் கல்சங்கரா, லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித், ஷியாம் ஷியாகு, ரமேஷ் உபாத்யாய, ஜெகதீஷ் என இவ்வழக்கில் இதுவரை பிடிபட்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் எதிராக ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கூறுகிறார்கள்.
   
                         மத அடிப்படைவாதம் ராணுவம் வரை ஊடுருவியிருக்கிறது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவும் அளவுக்கு அது புரையோடியிருக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்க்கும் 'நீதிமான்கள்' நியாயமாக இதற்கு எதிராகத்தான் குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், மௌனத்தைக் கிழித்துக்கொண்டு வரும் கூச்சல்களைக் கேளுங்கள். நாட்டின் பிரதான பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரான பாஜக தலைவர் எல்.கே. அத்வானி இந்தக் கைது நடவடிக்கையே "அபாண்டமானது'' என்கிறார். "பயங்கவாதத் தடுப்புப் படை பணி நாகரீகமின்றி ஓர் ஆன்மிகவாதியை காட்டுமிராண்டித்தனமாக நடத்துகிறது'' என்கிறார். "விசாரணை அலுவலர்களையே மாற்ற வேண்டும்'' என்கிறார். சிவசேனை நிறுவனர் பால் தாக்கரே, "பிரக்யா சிங்குக்கு வாதாட நல்ல வழக்குரைஞரை நியமிக்கத் தயார்; இதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அதை எதிர்கொள்ளத் தயார்'' என்கிறார். பாரதீய ஜன சக்தித் தலைவர் உமா பாரதி இன்னும் ஒருபடி மேலே போய் "சாத்விக்காக தேர்தல் 'சீட்' தரத் தயார்'' என்கிறார்.  ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குப் பரிந்துப் பேசுவதிலோ சட்ட ரீதியிலான உதவிகளை அளிப்பதிலோ என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். சரிதான். ஆனால், தில்லி குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட தன் மாணவர்களுக்கு 'ஜமியா மிலியா இஸ்லாமியா'வின் துணைவேந்தர் சட்ட உதவிக்கு ஏற்பாடு செய்தபோது இவர்கள் தெரிவித்த கருத்துகளையும் அவர் தாக்கப்பட்டதையும் இங்கு நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்து பயங்கரவாதம் என்ற சொல்லாடலைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றனர் பாஜகவினர். ஆனால், முஸ்லிம் பயங்கரவாதம், முஸ்லிம் பயங்கராவாதி என்ற சொல்லாடல்களை உருவாக்கியவர்களே இவர்கள்தானே?  பிரச்னை ஒன்றுதான். ஆனால், நாம் ஏன் இருவேறு கோணங்களில் எதிர்கொள்கிறோம்?
   
                         பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பது பயங்கராவாதிகளை ஒழிப்பது என்பது மட்டும் ஆகாது; அவர்களுடையவாதத்தை நேர்மையாக செயலிழக்கச் செய்வதும் ஆகும். "இந்தியாவில் சிறுபான்மையினர் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டாந்தரக் குடிமக்களாகிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது'' என்கிறார்கள் பயங்கரவாதிகள். நமக்கு கேட்க சகிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், குஜராத்திலும் ஒரிஸாவிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது? சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட நீதி விசாரணைகள் எப்படி இருக்கின்றன? பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக 16 ஆண்டுகளாக 47 வாய்தாக்களுடன் விசாரித்துக்கொண்டே இருக்கிறது லிபரான் ஆணையம். மும்பைக் கலவரம் தொடர்பாக 5 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையின் பரிந்துரைகள் எவ்வித அர்த்தமுமற்று கிடப்பில் கிடக்கின்றன. கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட ஜி.டி. நானாவதி ஆணையமும் யு.சி. பானார்ஜி ஆணையமும் இரு மாறுபட்ட அறிக்கைகளை அளித்தன. "நான்தான் வெட்டினேன். நான்தான் எரித்தேன்'' என 'தெஹல்கா' முன் பகிரங்க ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்கள் குஜராத்தில் சர்வ சுதந்திரமாக அதிகார பலத்துடன் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பங்காளிகள் ஒரிஸாவில் அடுத்த 'பரிசோதனை'யைத் தொடங்கிவிட்டார்கள். குண்டுவெடிப்புகள் அநீதியானது என நாம் குற்றஞ்சாட்டுகிறோம். மறுபுறம், மறுக்கப்படும் நீதியும் அநீதியானது என்பதை நாம் உணர வேண்டும். "பயங்கரவாதத் தடுப்புப் படையினர் பிரக்யா சிங்கிடம் விசாரணை நடத்தியபோது கடுமையாக நடந்துகொண்டார்கள்'' என்று குற்றஞ்சாட்டியதற்காக அத்வானியிடம் தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே. நாராயணனை அனுப்பி சமாதானப்படுத்துகிறார் மன்மோகன் சிங். ஏன்? இதுவரை பயங்கரவாத குற்றச்சாட்டுகளோடு யாரும் கைதுசெய்யப்பட்டதில்லையா அல்லது அவர்கள் எல்லாம் தாம் மோசமாக நடத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியதில்லையா அல்லது இது தேர்தல் காலம் என்பதாலா?

                          நம்முடைய கிராமப்புறங்களில் ஒரு சொலவடை உண்டு - "எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?'' என்று. இந்தச் சூழலுக்கு இந்தச் சொலவடை மிகப் பொருத்தமானதாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. அமெரிக்காவின் தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் 2007 அறிக்கையின்படி உலகில் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்குள்ளாகும் நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் பயங்கரவாதத்துக்கு 1,093 உயிர்களை நாம் இரையாக்கியிருக்கிறோம். பயங்கரவாதப் பிரச்னையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கெனவே நாம் நிறைய சமரசம் செய்திருக்கிறோம். அதற்காக நிறைய விலையையும் கொடுத்திருக்கிறோம். தேசப் பிதாவில் தொடங்கி அவர் பிறந்த மாநிலம் வரை நம்முடைய சமரசத்துக்கு நாம் கொடுத்திருக்கும் விலையே. 'சிமி'யையும் 'இந்தியன் முஹாஜிதீன்'களையும் நாம் எதிர்க்கிறோம். அதே எதிர்ப்பு 'ஆர்எஸ்எஸ்' மீதும் காட்டப்பட வேண்டும். அதே தடை 'ஆர்எஸ்எஸ்', 'விஷ்வ ஹிந்து பரிஷத்', 'பஜ்ரங் தள்', 'துர்கா வாஹினி', 'ஜான்தா ராஜா', 'ராஷ்டீரிய ஜாக்ரண் மஞ்ச்', 'அபிநவ் பாரத்' எனப் பெருகிக்கொண்டே இருக்கும் மதத் தீவிரவாத அமைப்புகள் மீதும் நீள வேண்டும். இந்தியாவில் எந்த பயங்கரவாத அமைப்புக்கும் இடமிருக்கக் கூடாது எனில், 'நீதிமான்'கள்  தம்முடைய மௌனத்தைக் கலைய வேண்டிய நேரமிது!
2008  

3 கருத்துகள்:

  1. ஜெயக்குமார்16 மே, 2013 அன்று 2:19 AM

    கருத்துச் சுதந்திர உரிமையின் துஷ்பிரயோகத்தின் உச்சம். நீங்கள் இங்கே எழுதி இருப்பதெல்லாம் உங்களின் அபிலாஷைகள். அவ்வன்னமே நடக்க விரும்பும் ஆவல். ஆனால் பாருங்கள் துரதிருஷ்டவசமாக நீங்கள் சொல்லும் “ஏராளமான ஆதாரங்கள்” எதுவும் இல்லாததால்தான் இன்றைக்கும் காங்கிரஸால் எதுவும் செய்ய இயலவில்லை. இருந்திருந்தால் இன்றைக்கு இந்து இயக்கங்களை தடை செய்து உங்களைப்போன்ற போலிமதச்சார்பின்மைவாதிகளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி இருப்பார்கள். இனிமேலாவது உண்மையை எழுதப்பழகுங்கள், எப்படி எழுதினால் கைதட்டு கிடைக்கும் என்பதற்காக எழுதாமல்..

    பதிலளிநீக்கு
  2. உண்மைகளுக்குத் தொடர்பில்லாத மதச்சார்பின்மை அடிபடைவாத வெறியின்(வெறி எதன் அடிப்படையிலும் வரலாம், சாதி-மதம் தொடர்பாகத்தான் வரவேண்டுமென்பதில்லை)வெளிப்பாடு இந்தக் கட்டுரை.
    - கண்ணன்

    பதிலளிநீக்கு
  3. Ulagathula nadakkara 90% kundu vedippugal ellame matham sambantha pattavai.... Ithulam Yaaru pannaranganu Ellarkkum therium.... Thappu yaar pannalum thappu than.

    பதிலளிநீக்கு