இந்தத் தலைமுறை கொஞ்சம் விசித்திரமானது. தனது பாரம்பரிய சொத்துகள் அனைத்தையும் தன் கண் முன்னாலேயே இழந்துக்கொண்டிருக்கும் ஒரு தலைமுறை இது. இழந்துகொண்டிருக்கும் பட்டியலில் நமது ஆதித் தொழில்களில் ஒன்றான பனைத் தொழிலையும் இப்போது சேர்த்துக்கொள்ளலாம்.
பனைத் தொழிலுக்கென 1968-ல் உருவாக்கப்பட்டது தமிழ்நாடு பனை வெல்லலம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம். கதர் வாரியத்தின் கீழ் செயல்பட்ட இந்த அமைப்புக்கு மும்பை கதர் ஆணைக் குழு மூலதனக் கடன் வழங்கிவந்தது. இது தவிர, மாவட்ட அளவில் 8 சம்மேளனங்கள், 1,511 கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 3.5 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருந்தனர். பனைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொண்ட இணையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் பெற்றனர்.
நல்ல லாபத்தில் இயங்கிவந்ததால் இணையத்துக்கென பல்வேறு இடங்களில் பனந்தோப்புகள், கட்டடங்கள் என்று சொத்துகள் வாங்கப்பட்டன. போதிய அக்கறை காட்டியிருந்தால் மாநிலத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனைப் பொருட்களுக்கென ஒரு நிரந்தரச் சந்தையாக இந்த இணையத்தை மாற்றியிருக்க முடியும். ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகளின் தவறான கொள்கைகளால் தொடர்ந்து கண்டுகொள்ளப்படாமல் போனதாலும் கூட்டுறவு நிறுவனங்களுக்கே உரிய சீர்கேடுகளாலும் இணையம் சீரழிந்தது. இந்நிலையில், 1996-ல் மூலதனக் கடன் வழங்குவதை நிறுத்தியது மும்பை கதர் ஆணைக் குழு. பல இடங்களில் விற்பனையகங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டன. இணையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கில் ஊதிய நிலுவை. அந்தத் தொகையே ரூ. 5 கோடியைத் தாண்டுகிறது. இன்று பெயரளவிலான அமைப்பாக மாறிவிட்டது இணையம்.
பனை என்றாலே கள்ளுடன் மட்டுமே தொடர்புபடுத்துவதும் 'கள் விற்பனை சரியா; தவறா?' என்ற விவாதத்தின் பெயரில் இத்தொழிலைப் புறக்கணிப்பதுமே இங்கு அரசியல் வாடிக்கையாகிவிட்டது. கள் அல்ல; பதநீரை வைத்தே இத்தொழிலில் பல வாய்ப்புகளையும் சந்தையில் பெரும் மாற்றத்தையும் உருவாக்க முடியும். தவிர, மதிப்புக் கூட்டப்பட்ட பனைப் பொருட்களுக்கென உலகச் சந்தையில் நல்ல இடம் இருக்கிறது.
நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பனைப் பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாகச் சந்தைப்படுத்தினால் ஆயிரக் கணக்கானோருக்கு வேலையளிக்க முடியும். அதற்கு பனைத் தொழில் தொழில்வழிமயமாக்கப்பட வேண்டும். இணையத்தை சுய அதிகாரமிக்க பொது நிறுவனமாக மாற்ற வேண்டும். பால் கொள்முதல் - விநியோக முறை போன்று பனைப் பொருட்களை அந்த நிறுவனம் மூலம் நேரடிக் கொள்முதல் - விநியோகம் மேற்கொள்ள வேண்டும். பாளைச் சீவுதலில் புதிய உத்தி, பதநீர் சளிப்படைதல், பனை வெல்லம் கசிவடைதல் ஆகியவற்றைத் தவிர்ப்பது என்று நிறைய மாற்று முறைகளைக் கண்டறிய வேண்டும். பனைத் தொழில் தொடர்பான புதிய முயற்சிகள், ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஒருபுறம் பனை மரங்கள் வெட்டப்படுவது தொடர்கிறது; மறுபுறம் பனை பயிரிடுவது அருகிவருகிறது. அபாயமிக்க தொழில்களில் ஒன்று பனையேறுதல். இளைய தலைமுறையினர் எவரும் பனையேறுவதில் ஆர்வம் காட்டவில்லை; அதில் அர்த்தமுமில்லை. வாழ்ந்துகொண்டிருப்பது பனையேறிகளின் கடைசித் தலைமுறை. அவர்கள் காலமும் போய்விட்டால் அடுத்த தலைமுறைக்கு எந்தப் பல்கலைக்கழகம் மூலமாக அரசு பனையேறக் கற்றுக்கொடுக்கப் போகிறது?
இதுவரை பனைத் தொழிலை ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த பிரச்னையாகவுவும் அரசியல் பார்வையுடனும் மட்டுமே அரசு அணுகிவந்திருக்கிறது. கண் துடைப்பு நடவடிக்கைகள் மாற்றங்களுக்கு வழிவகுப்பதில்லை. எத்தனையோ திட்டங்களின் பெயரால் ஆயிரக் கணக்கான கோடிகளை செலவழிக்கிறது அரசு. அரசு நினைத்தால் பனைத்தொழில் மூலமாக சில கோடிகளில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளிக்க முடியும்; இந்த மண்ணின் பாரம்பரியமான ஒரு தொழிலை அழிவிலிருந்து காக்க முடியும்; மாற்றங்களை நிகழ்த்த முடியும்.
2007 தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக