நான் சாதிக்கு எதிரானவன்; நீங்களுக்கும்கூட சாதிக்கு எதிரானவராக இருக்கலாம். ஆனால், ஒரு சாதிக்கு 4,830 கோத்திரங்கள் உள்ள ஒரு நாட்டில், 25,000-க்கும் மேற்பட்ட சாதிகளும் துணை சாதிகளும் உள்ள ஒரு நாட்டில் சாதி இல்லை என்று நாம் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால், நாம் ஏமாற்றுகிறோம் அல்லது ஏமாந்துகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியர்களுக்காக பிரிட்டனில் குரல் கொடுத்தவர்களில் குறிப்பிடத் தக்க சிந்தனையாளரான எட்மண்ட் பர்க் ஒருமுறை இப்படிச் சொன்னார்: “இந்திய நாட்டின் மத வரையறைகள், நில வரையறைகள், மரியாதைக்கான கோட்பாடுகள் யாவும் சாதிச் சட்டங்களுடன் காலாகாலத்திற்கும் பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டிருக்கின்றன.”
எட்மண்ட் பர்க்கின் கூற்று அப்படியே உயிரோடு இருக்கிறது. நாளுக்கு நாள் மேலும் அது துடிப்பைப் பெறுகிறது. நாம் வாழும் காலத்துக்குள் அது பொய்த்துவிடும் என்பதற்கு எந்த நம்பிக்கைக்கும் இல்லை. இந்த 21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் முன்னணி நகரங்களில், நாகரிகச் சமூகம் என்று கருதப்படும் நன்கு படித்த உயர் வர்க்கக் குடும்பங்களில்கூட நடக்கும் கௌரவக் கொலைகள் எதைக் காட்டுகின்றன? காலங்காலமாக சமூகத்தால், மிதித்து நசுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு இந்த நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் அரசு 27% இடஒதுக்கீடை அளிக்க முடிவெடுத்தபோது அதை எதிர்த்து, 'நவீன இந்தியாவின் குழந்தைகள்' என்று நாம் நம்பிக்கொண்டிருந்தோர் நடுத்தெருவில் ஆடிய ஆட்டம் எதைக் காட்டுகிறது?
இந்தியச் சமூகக் கட்டமைப்பின், அரசியல் கட்டமைப்பின் அத்தனை இழைகளும் சாதியோடு இழுத்துக் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் சமூகநீதி என்கிற வார்த்தைக்கான அர்த்தமே அங்கிருந்துதான் தொடங்குகிறது.
இந்தியாவில் ஏன் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது? வளர்ச்சியை முன்னிறுத்தியும் இடஒதுக்கீட்டை மறுத்தும் பேசுபவர்கள் வசதியாக மறந்துவிடும் விஷயம் இது.
குறைந்தது 2000 வருஷங்கள் சாதியின் அடிப்படையிலேயே இந்தச் சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பின் 60 ஆண்டுகள் கழித்தும், இந்த தேசத்தால் தன்னுடைய குடிமக்களில் 11% பேருக்கு மட்டுமே உயர்கல்வி வாய்ப்பை அளிக்க முடிகிறது. வெறும் 7% பேருக்கு மட்டுமே அமைப்பு ரீதியிலான பணியை அளிக்க முடிகிறது. அதிலும் ஆகப் பெரும்பான்மையினருக்கு (66%) பொதுத் துறைகளே பணி அளிக்கின்றன. இந்தியாவில் இடஒதுக்கீட்டுக்கான தேவை இங்குதான் நிலைக்கிறது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்போது இடஒதுக்கீடு குறித்து யார் கவலைப்படப்போகிறார்கள்?
ஆனால், இன்னமும் இடஒதுக்கீடு விஷயத்தில் இந்தியாவால் தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை. தன்னுடைய குடிமக்களில் அனைத்துப் பிரிவினருக்கும் உரிய நியாயத்தைச் செய்ய முடியவில்லை. உதாரணமாக, வண்ணார் இனம் (சலவைத் தொழிலாளர்கள்) மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.சி. பட்டியலில் இருக்கிறது. மஹாராஷ்டிரத்திலோ ஓ.பி.சி. பட்டியலில் இருக்கிறது. தமிழகத்திலோ கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.சி. பட்டியலிலும் ஏனைய மாவட்டங்களில் ஓ.பி.சி. பட்டியலிலும் இருக்கிறது. வஞ்சரா இனம் மஹாராஷ்டிரத்தில் ஓ.பி.சி. பட்டியலிலும் கர்நாடகத்தில் எஸ்.சி. பட்டியலிலும் ஆந்திரத்தில் எஸ்.டி. பட்டியலிலும் உள்ளது. இப்படி பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கான எல்லை 50%-ஐத் தாண்டக் கூடாது என்கிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது பிரிவைப் பயன்படுத்தி அந்த அளவை மீறும்போதும், இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் வரும்போதும் அங்கு அரசு எதிர்கொள்ளும் முக்கியமான சங்கடம் அதன் வாதத்துக்கு அடிப்படையிலான சாதிரீதியிலான கணக்கெடுப்பு விவரம் இல்லாதது. இந்திய அரசிடமோ சாதி அடிப்படையிலான துல்லியமான கணக்குகள் எதுவும் கிடையாது. இதற்கு முன் முதலும் கடைசியுமாக 1931-ல் பதிவுசெய்யப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு விவரம் மட்டுமே மத்திய அரசிடம் இருக்கிறது. ஆகையால், இந்த விஷயத்தில் மாநில அரசுகளையே அது சார்ந்திருக்கிறது. மாநில அரசுகளிடத்தில் உள்ள கணக்குகளோ அது அளித்திருக்கும் சலுகைகள், சான்றுகள் அடிப்படையிலானவை குத்துமதிப்பானவை. அரசாங்கத்தைத் தவிர்த்து, அரசியல்வாதிகளிடமும் சாதிச் சங்கங்களிடமும் கணக்கு உண்டு. ஆனால், அவர்களுடைய கணக்கைக் கூட்டினால், இந்தியாவின் மக்கள்தொகை மூன்று மடங்கு அதிகரித்துவிடும்.
இந்நிலையில், சுதந்திர இந்தியா முதல் முறையாக தன்னுடைய குடிமக்கள் தொடர்பான ஒரு முழுமையான கணக்கெடுப்பை நடத்தும்போது சாதிரீதியிலான தகவல்களையும் ஏன் பதிவுசெய்யக் கூடாது?
சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்பவர்கள் இந்தக் கணக்கெடுப்பு சாதியமற்ற சமூக அமைப்புக்கு எதிரானது என்கிறார்கள். அப்படியொரு சமூக அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா என்ன? அப்படி இருந்தால், கேவலம் ஒரு கணக்கெடுப்பால் அது சிதைந்துவிடுமா என்ன? எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மையான சாதிகள் தங்கள் எண்ணிக்கைக்கேற்ப இடஒதுக்கீடு கோரும் என்கிறார்கள். கோரட்டுமே. புள்ளிவிவரங்கள் வந்தால் இடஒதுக்கீட்டுக் கணக்குகள் மாறிவிடும் என்கிறார்கள். மாறட்டுமே. சூட்சமங்கள் புரியாமல் இல்லை. நேற்று யாரெல்லாம் இடஒதுக்கீட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்களோ அவர்களே இன்றைக்கு, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். அரசுக் கணக்கெடுப்பைத் தொடங்கட்டும். என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். அட, உண்மை வெளியே வரட்டுமே!
2010 தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக