கொஞ்சம் பால்; நிறைய விஷம்!


      ஞாபகம் இருக்கிறதா? சில மாதங்களுக்கு முன் நம்முடைய உணவு ஆய்வாளர்கள் குப்பைக்கிடங்குகளிலும் நீர்நிலைகளிலும் வாளி வாளியாக பாலை ஊற்றி அழித்தார்கள். கலப்படப் பால் எனக் கூறி கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்ட இந்தப் பாலின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் முடிவுகள் வந்ததும் தவறிழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்கள். எல்லா ஊடகங்களிலும் முக்கியச் செய்தியாக அது வெளியானது. என்னவாயிற்று அந்த ஆய்வு முடிவுகள்?

    நாம் கேட்க மாட்டோம். ஏனென்றால், தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக அலுவலர்களால் எடுக்கப்படும் சாதாரணமான கண்துடைப்பு நடவடிக்கை அது என்பது நமக்குத் தெரியும். ஆனால், பால் சமாச்சாரம் சாதாரணமானதல்ல. ஏனெனில், பாலில் தண்ணீரைக் கலந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. "யூரியா, உ
றிஞ்சுதாள், சோடியம் பை கார்பனேட், விலங்குகளின் கொழுப்பு, ஸ்டார்ச், சோப்பு தூள், ரசாயனக் கலவைகள்... இன்னும் என்னவெல்லாம் கலக்க முடியுமோ அவை அனைத்தும் பாலில் கலக்கப்படுகின்றன'' என்கின்றனர் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் துறையினர்.
   பாலில் உள்ள பிரதான காரணிகளே 4.5 சத கொழுப்பு; 8.5 சத புரதம்தான். கொழுப்பையும் புரதத்தையும் கையாளும் தொழில்நுட்பம் வந்த உடனேயே பாலில் நிறைக்கட்டுவதற்காக கண்டதையும் கலக்கும் 'தொழில்நுட்ப'மும் வந்துவிட்டது. கறந்த பாலை குளிரூட்டப்பட்ட நிலையிலும்கூட அதிகபட்சம் 3 நாள்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. ஆனால், 3 நாள்களிலிருந்து 7 நாள்கள் வரையிலான பாலைக்கூட சர்வ சாதாரணமாக விநியோகிக்கின்றன பால் நிறுவனங்கள். தங்களுடைய தில்லுமுல்லு வெளியே தெரியாமல் இருக்க பொட்டலங்களில் அச்சடிக்கப்படும் நாளை பின்தேதியிட்டு விநியோகிக்கின்றன. இதெல்லாம் யாருக்கும் தெரியாமல் நடக்கும் காரியங்கள் அல்ல. பால் நிறுவனங்களில் பணியாற்றுவோரில் தொடங்கி அதை வாடிக்கையாளரிடம் சேர்க்கும் கடைக்காரர் வரை எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்த ரகசியங்களே. உணவு ஆய்வாளர்களுக்கு, உள்ளூர் பால் வியாபாரிகளில் தொடங்கி பெரிய பால் நிறுவனங்கள் வரை அவர்கள் மேற்கொள்ளும் சகல கலப்பட சமாச்சாரங்களும் தெரியும். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்தே தவறுகள் அனுமதிக்கப்படுகின்றன. இரண்டு காரணங்கள். ஒன்று - பணம்; இன்னொன்று - அரசியல்.
   உலகில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் பட்டியலில் இந்தியர்கள் முன்னணி வகிக்கிறார்கள். ஆண்டுதோறும் சராசரியாக 85,000 பேருக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது; 58,000 பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் வாய், குடல், வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமானது.
சுகாதாரமற்ற - கலப்பட உணவுப் பொருள்களை நாம் உட்கொள்ளும்போது "ஹெலிகோ பாக்டர் பைலோரை' எனும் பாக்டீரியாவை அவை உருவாக்குகின்றன. புகையிலை உருவாக்கும் பாதிப்புக்கு இணையான பாதிப்பை உருவாக்கும் பாக்டீரியா இது. மதுவாலும் புகையிலையாலும் புற்றுநோயாளிகள் உருவாகும்போது அதை நோயாளிகளின் குற்றம் எனக் கருதி புறந்தள்ளலாம். ஆனால், பால் குடித்து புற்றுநோயால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால், அதற்காக அவர் சார்ந்திருக்கும் சமூகமும் அரசும் வெட்கப்பட வேண்டும். ஆனால், யாருமே தங்களுடைய குற்றங்களை உணர்வதில்லை.
   மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள்; பூச்சிக்கொல்லிகளாலும் ரசாயன உரங்களாலும் விளைவிக்கப்பட்ட காய், கனிகள்; கலப்பட உணவுப் பொருள்கள், நச்சுத்தன்மை மிக்க குளிர்பானங்கள்; தடை செய்யப்பட்ட மருந்துகள்...
  விஷத்தை உண்டு, விஷத்தைப் பருகி, விஷத்தால் வளர்வதால்தானோ என்னவோ விஷமாகிக்கொண்டே இருக்கிறோம் நாமும்!
2009 தினமணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக